மேட்டூர் அணை நீர்மட்டம் 53.38 அடியாக சரிவு
- அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 மாதத்துக்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
இதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். மேலும் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து குறிப்பிட்ட நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதாலும், தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.
இதற்கிடையே கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.