தமிழ்நாடு

சென்னையில் இன்று 200 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்- அலைமோதிய மக்கள்

Published On 2022-11-05 12:58 IST   |   Update On 2022-11-05 13:14:00 IST
  • மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.
  • மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை:

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை முழுவதும் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி மருத்துவ துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த முகாமை நடத்தினார்கள்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடந்தன. பெரும்பாலான முகாம்களில் கூட்டம் அலைமோதியது.

சேறு நிறைந்த தண்ணீரில் விளையாடியதால் சேற்றுப் புண்கள் ஏற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு மருந்து தடவி தொடர் சிகிச்சைக்கு மருந்தும் வழங்கினார்கள்.

பலர் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்காக சிகிச்சை பெற வந்திருந்தனர். அவர்களை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

முகாம்களில் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.

மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

2006-ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது இதே போல் மழைக்காலத்தில் 155 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 64 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். அது இந்திய அளவில் சாதனையாக பதிவானது.

இன்றும் 200 இடங்களில் நடந்து வரும் முகாம்களில் ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள்.

கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தது. பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொடர் நடவடிக்கையால் பாதிப்பு குறைவாக இருந்தது.

கடந்த ஆண்டுகளில் மக்கள் பாதிப்புகளை சொல்ல திரண்டதை பார்த்தோம். இந்த ஆண்டு திரண்டு வந்து நன்றி சொல்கிறார்கள். மழை வெள்ளம் மறைந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

இரண்டே நாளில் மழை பாதிப்பில் இருந்து சென்னை விடுபட்டுள்ளது. தேவையான அளவு நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கி தந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகள் பெருமை தேடி தந்துள்ளனர்.

9-ந்தேதி பெரிய அளவில் மழை வரும் என்கிறார்கள். எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. விரைவில் அந்த பணியையும் செய்து முடித்து அடுத்த ஆண்டு நூறு சதவீதம் மழை பாதிப்பு இல்லாத வகையில் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News