சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் உயிருடன் இருந்த தவளை: பொதுமக்கள் அதிர்ச்சி
- குடிநீர் விற்பனை நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
- மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த தண்ணீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரம் தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20 லிட்டர் கேன்களிலும் மயிலாடுதுறை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கச்சேரி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொதுமக்கள் வாங்கிய அந்த நிறுவனத்தை சேர்ந்த குடிநீர் கேனில் உயிருடன் தவளை இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த மளிகை கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த தண்ணீர் கேனின் மூடி பிரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த தண்ணீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தண்ணீர் நிரப்பப்படாத கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளை உள்ளே நுழைந்து இருக்கக்கூடும் என்று கூறிய அலுவலர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள், நத்தை, மரவட்டை ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இது குறித்து குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தண்ணீர் கேன் திறக்கபட்டு இருந்ததால் நிறுவனத்துக்கு சீல் வைக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்தார்.