பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்
- தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
- போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பாரதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னமயில், பெரியகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் பங்கேற்ற டி.எஸ்.பி. மற்றும் பெண் போலீசார் பாரதிக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிவித்து, மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர். மேலும் போலீஸ் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.