தமிழ்நாடு

தீபாவளி திருடர்களை பிடிக்க போலீஸ் உஷார்: ரங்கநாதன் தெருவில் 25 கேமராக்களை பொருத்தி ரகசிய கண்காணிப்பு

Published On 2023-11-09 13:34 IST   |   Update On 2023-11-09 13:34:00 IST
  • சென்னை மாநகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கடை வீதிகள் களை கட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை:

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட வணிக பகுதிகளில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்களை வாங்கும் மக்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது போன்ற தீபாவளி திருடர்கள் கூட்டத்துக்குள் புகுந்துள்ளார்களா? என்பதை கண்காணிப்பதற்காக ரங்கநாதன் தெருவில் மட்டும் 25 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே திருடர்களை கண்காணித்து வருகிறார்கள். இதற்காக தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து சந்தேக நபர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கூட்டத்தில் ஊடுருவி இருக்கும் திருடர்களை பிடிக்க கம்ப்யூட்டர் உதவியுடன் கண்காணிக்கும் போலீசார் கூட்டத்துக்குள் ரகசியமாகவும் கண்காணித்து வருகிறார்கள். பெண் போலீசார் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகிறார்கள். கூட்டத்தில் ஊடுருவும் கொள்ளையர்கள் மற்றும் சில்மிஷ மன்னர்களை பிடிக்க பெண் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தி.நகர் பகுதியில் மட்டும் சுழற்சி முறையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி திருடர்களின் போட்டோக்களை பேனராக தயாரித்து போலீசார் பொது இடங்களில் வைப்பது வழக்கம். அதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தற்போது அதுபோன்று போலீசார் பேனர் வைப்பது இல்லை. அதற்கு பதிலாக கம்ப்யூட்டர்களில் திருடர்களின் போட்டோக்களை சேமித்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீபாவளி முடியும் வரை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கடை வீதிகள் களை கட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News