தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக அரசைக் கண்டித்து மார்ச் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2024-02-27 04:02 GMT   |   Update On 2024-02-27 06:47 GMT
  • போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது
  • போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் அமைச்சர்களுடன் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டு உள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும்.

இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டு உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழக காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் ஒரு நிகழ்ச்சியில், மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்துப் பாராட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதன்மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே,'வேளியே பயிரை மேய்கிறதா?'என்ற சந்தேகம் தமிழ் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படுத்த வேண்டிய தலையாய கடமை எனக்கு இருக்கிறது.

எனவே, தி.மு.க. அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய அமைப்புகளின் சார்பில், வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News