ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் 'திடீர்' வெள்ளப்பெருக்கு: கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன
- ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும்.
- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கிருஷ்ணன் கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவானது. இந்த நிலையில் நேற்று காலையில் மழை சற்று குறைந்து வெயில் முகம் காட்டியது. இதற்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் அடிவாரத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவிலுக்கு முன்பாக செல்லும் ஆற்றில் பாறை, மரங்கள் அடித்து வரப்பட்டன. இந்த தண்ணீர் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு சென்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் இரவு அங்கேயே முகாமிட்டு குடிநீரை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் முள்ளியாறு, பேயனாறு ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புதுக்குளம், செங்குளம், கருங்குளம், பிரண்டைக்குளம் உள்ளிட்ட ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 108 கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும். இங்கு 15 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது நீர்மட்டம் 13 அடியை எட்டியுள்ளது. தொடர்மழை காரணமாக ராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் பள்ளங்களாக மாறி, போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமானோர் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வத்திராயிருப்பு-99.6, விருதுநகர், ராஜபாளையம்-88, திருச்சுழி-23, காரியாபட்டி-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-64, சாத்தூர்-25, சிவகாசி-24.4, பிளவக்கல்-41.2, வத்திராயிருப்பு-93.6, கோவிலாங்குளம்-63.9, வெம்பக்கோட்டை-16.2, அருப்புகோட்டை-36. மாவட்டம் முழுவதும் மொத்தம் 610 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் நேற்று காலை முதலே கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. ராமநாதபுரம், பெரியபட்டினம், பனைக்குளம், என்மனங்கொண்டான், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-74.60, மண்டபம்-12.40, ராமேசுவரம்-11.50, பாம்பன்-11.90, தங்கச்சிமடம்-23.40, பள்ளமோர்க்குளம்-18, திருவாடானை-10.60, தொண்டி-8.80, ஆர்.எஸ்.மங்கலம்-9.80, பரமக்குடி-58.60, முதுகுளத்தூர்-45, கமுதி-53.60, கடலாடி-65, வாலிநோக்கம்-15.20, தீர்த்தாண்ட தனம்-23.40, வட்டாணம்-21.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479 மி.மீ. மழை பெய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளன. மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், நெற்குப்பை உள்ளிட்ட ஊர்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய, விடிய அடை மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.