தமிழ்நாடு

மது ஒழிப்பு மாநாட்டில் விஜய் பங்கேற்கலாம்... திருமாவளவன் அழைப்பு

Published On 2024-09-11 06:38 GMT   |   Update On 2024-09-11 06:38 GMT
  • 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு.
  • சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

விழுப்புரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று. மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது. இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது.

மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே. இது 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு. சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அ.தி.மு.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம்.

பா.ஜ.க, பா.ம.க.விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும். கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது.

பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு. தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக மத்திய மந்திரியே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக இருப்பது தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News