தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக பவள விழாவில் விசிக பங்கேற்குமா? திருமாவளவன் பதில்

Published On 2024-09-25 10:29 GMT   |   Update On 2024-09-25 10:29 GMT
  • திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.
  • கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும்.

சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது மது விலக்கு தொடர்பாக கோரிக்கைகளை நேரில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதனால் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் இடையே நீடித்து வந்த சலசலப்பு அடங்கியது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மது விலக்கு தொடர்பாக மீண்டும் பரபரப்பான பதிவுகளையும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க. வெல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். இவரது இந்த கருத்து தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதி.மு.க. எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தி இருந்தார். இதனால் தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே மீண்டும் சலசலப்பு உருவாகி உள்ளது.

இந்த நிலையில், வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கும் தி.மு.க.வின் பவள விழாவிற்கு வருகை தரும்படி கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை "சகோதரர்" என குறிப்பிட்டு, அவர் இந்த விழாவில் மற்ற கூட்டணித் தலைவர்களுடன் உரையாற்றவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தல் மட்டுமல்ல, 2029 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் கூட்டணி தொடர்பாக கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார்.

Tags:    

Similar News