தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்திய தலைவர்கள்
- தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை :
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், தாமு, ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் செலுத்தினர்.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருவதால் வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.