தமிழ்நாடு

இயலாதோருக்கு இயன்றவரை உதவிக்கரம் நீட்டிய கேப்டன்

Published On 2023-12-28 11:58 IST   |   Update On 2023-12-28 11:58:00 IST
  • பல்வேறு தமிழர் சார்ந்த உரிமைப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினார்.
  • எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்.

விஜயகாந்த், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்று தனது மனிதநேய பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.


குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து என பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் எனப் பாரபட்சமின்றி முதல் ஆளாக முன் வந்து நிவாரணங்கள் வழங்கியவர்.

பல்வேறு தமிழர் சார்ந்த உரிமைப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினார். இது போன்று எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த். மொத்தத்தில் அனைவராலும் நேசிக்கப்படக்கூடியவர் என்பதே நிதர்சனமான உண்மை.

திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன்கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக்கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

Tags:    

Similar News