கணவரை பிரிந்த இளம்பெண்ணை வீட்டில் அடைத்து பல நபர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்த வாலிபர்கள்
- கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
- இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கோவை:
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண்.
இவருக்கும், அவரது ஊரின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் வீடுகள், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இளம்பெண் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது உறவினர்கள் பார்த்து இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் இவ்வளவு நாள் எங்கு சென்றாய் என விசாரித்தனர். அப்போது இளம்பெண் தன்னை பல நபர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.
கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
அவர் இளம்பெண்ணிடம் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வேண்டுமானால் வந்து விடு என தெரிவித்துள்ளார். இதனை இளம்பெண்ணும் நம்பி அவருடன் சென்றார்.
இதையடுத்து சிவனேஷ்பாபு இளம்பெண்ணுக்கு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார். பின்னர் வெளியில் செல்வதாக கூறி விட்டு, சென்ற போது அந்த வீட்டின் கதவையும் பூட்டி சென்று விட்டார். இதனால் இளம்பெண்ணுக்கு பயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிவனேஷ்பாபு, வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடன் மற்றொரு வாலிபரும் வந்திருந்தார்.
அவர் யார் என்று கேட்டபோது, தனது நண்பர் என்றும், அவரது பெயர் ராகுல் என்றும் மெக்கானிக்காக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறிது நேரம் பெண்ணிடம் பேசி கொண்டிருந்த நபர்கள், திடீரென அவரிடம் தவறாக நடக்க முயன்றனர்.
அதிர்ச்சியான இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 பேரும் இளம்பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். தொடர்ந்து இதுபோன்று வீட்டிற்குள் அடைத்து வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணிடம் தாங்கள் கூறும் நபர்களுடன் நீ உல்லாசம் அனுபவிக்க வேண்டும்.
இல்லையொன்றால் கொன்று விடுவதாக மிரட்டிஉள்ளனர். அவர் மறுக்கவே அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டி பல்வேறு நபர்களுக்கும் இளம்பெண்ணை விருந்தாக்கி உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும், பல நபர்களுடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களது தொல்லைகள் அதிகரிக்கவே இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும், சிவனேஷ் பாபு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.