அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்- 400 பேர் கைது
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
- போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜ் விளக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஐவின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஷோபன்ராஜ், அந்தோணி, லட்சுமணன், சுரேஷ், சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.