தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு யானை சிற்பத்தில் தீபாவளி பட்டாசு வெடித்து அத்துமீறல்

Published On 2022-10-23 09:02 GMT   |   Update On 2022-10-23 11:41 GMT
  • அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர்.
  • தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, அர்ச்சுனன்தபசு, புலிக்குகை போன்ற பகுதிகளை ஐ.நா. சபையின் கலாச்சார பிரிவு (யுனஸ்கோ) சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரித்து உலகளவில் விளம்பரமும் செய்து வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். இவர்களிடம் மத்திய தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக ரூ.600 வசூலிக்கின்றனர்.

இந்த நினைவு சின்னங்களில் உள்நாட்டு பயணிகள், காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பெயர்களை கரியால் எழுதுவதும், கற்கலால் கிறுக்குவது, அதன்மேல் அமர்ந்து மது அருந்துவது என சிற்பங்களை சேதப்படுத்தி வந்தனர். இதை தடுக்கும் வகையில் தொல்லியல்துறை நிர்வாகம் கூடுதலாக நிதி ஒதுக்கி, துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு போட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.

இந்நிலையில் அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர். இதில் அர்ச்சுனன்தபசு யானை சிலை மீது ஒரு பட்டாசு விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதில் லேசான சேதமும், கருமை நிறமும் படர்ந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலகத்தில் கேட்டபோது புராதன சின்னம் அருகில் வெடி வெடிக்க தடைகள் இருந்தும் அத்துமீறி வெடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எங்கள் டிக்கெட் கவுண்டர், பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். இனி இதுபோல் நடப்பதை தடுக்க பண்டிகை நாட்களில் அப்பகுதியில் கூடுதல் காவலர்களை நிறுத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News