தமிழ்நாடு

'மது ஒழிப்பு மாநாடு' - 2026-இல் திருமாவின் தேர்தல் கணக்கு..?

Published On 2024-09-11 14:45 GMT   |   Update On 2024-09-11 14:45 GMT
  • மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாஜக, பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
  • கள்ளச்சாராய மரணங்களை அடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கு கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில் உளுந்தூர்பேட்டையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டிற்கு பாஜக, பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக அதிமுகவும், தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

பின்பு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த தேர்தலில் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை திமுக கைவிட்டது.

அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய மரணங்களை அடுத்து மீண்டும் மதுவிலக்கு கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகமான ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்த போதிலும் மாநிலத்திற்கான வரி வருவாய் பங்கீடு மிக குறைவாகவே கிடைப்பதாக திமுக அரசு கூறி வருகிறது. பத்திரப்பதிவு மற்றும் டாஸ்மாக் வருவாய் தான் தமிழ்நாடு அரசின் பிரதான வருவாயாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் வருவாய் தமிழ்நாட்டின் பிரதான வருவாயாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி மது, போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் 2026 தேர்தல் கணக்குகள் முழுமையாக இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற விசிக கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியவில்லை. பின்பு 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் விசிக வென்றது. சிதம்பரம் தொகுதியில் வென்று திருமாவளவன் எம்பி ஆனார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்த விசிக 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுக விசிக இடையே இழுபறி நீடித்தது. விசிக 3 மக்களவை தொகுதிகள் கேட்டது. ஆனால் இறுதியாக திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இந்த தொகுதிப் பங்கீடு விசிகவிற்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இன்னும் ஒன்றரை வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த முறை போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளில் போட்டியிடவே விசிக விரும்பும். இந்நிலையில் சென்ற முறை ஒதுக்கிய 6 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை விசிகவிற்கு திமுக ஒதுக்குமா? என்றும் உறுதியாக சொல்லமுடியாது.

நிலைமை இப்படியிருக்க திமுக கூட்டணியில் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க விசிக இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், திமுகவிற்கு எதிராக அதிமுக - தவெக (விஜய்) - நாதக (சீமான்) ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி ஏற்பட்டால் விசிக கட்சி கூட்டணி மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், திமுகவின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆகியவற்றை பொறுத்துத்தான் விசிக எந்த கூட்டணியில் சேரும் என்று முடிவாகும்.

Tags:    

Similar News