2026 சட்டமன்ற தேர்தல்: முதல் வேட்பாளரை அறிவித்த சீமான்
- அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
- தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
தென்காசி:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க. தமிழகத்தில் 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை தலைமை கழகத்தினர் வழங்கி வருகின்றனர்.
அ.தி.மு.க.வும் மீண்டும் ஆட்சியை பிடித்து அரியணையில் அமர நிர்வாகிகளை கடுமையாக உழைக்க வேண்டும் என உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய பணிகளையும் ஒருபுறம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சீமான், சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கவுசிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுசிக் பாண்டியன் கடந்த 2023-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தற்போது அக்கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார்.
பிரதான கட்சிகள் இன்னும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில் வழக்கம்போல் சீமான் தனது பாணியில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தனது கட்சியின் முதல் வேட்பாளரை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.