தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்- திருமாவளவன்
- தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
- மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.
இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.
பட்டியலின மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் தொகுதிகளில் எல்லை வரையறை செய்யப்படுகிறது.
வரும் காலங்களில் முறையாக தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.
ஆதாயம் கருதி அரசியல் செய்வதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.