null
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்? த.வெ.க. தலைவர் விஜய்
- எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாக தெரிகிறது.
- அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு த.வெ.க. தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு!
புதிதாக திறக்கப்பட்டு நாளாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால், ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது.
அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது ஏனென்றால்,
1. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினார்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை: Ballot முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
2. மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.
"நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. Shortage of MPs is not at all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in Principle and not a Principal democratic issue. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.
3. நாடாளுமன்றத்தின் முதன்மை நோக்கங்கள். போதிய விவாதங்களுக்குப் பிறகு சட்டங்கள் இயற்றுவது மற்றும் ஆளும் அரசைக் கேள்வி கேட்டு, அது நேர்மையாக மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால் தற்பொழுது இந்த முக்கிய ஜனநாயகப் பணியை நாடாளுமன்றம் செய்யத் தவறி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. நமது நாடாளுமன்ற முறை பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு உள்ளது போன்று 'பிரதம மந்திரி கேள்வி நேரம்" (Prime Minister question time) போன்ற எந்த ஒரு சாதனத்தையும் நம் நாடாளுமன்றம் வகுக்கவில்லை. நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வராமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் எந்த ஒரு பலனும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால் ஊழல் மலிந்த இன்றைய அரசியல் சூழலில், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைவானதாகவே உள்ளது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. மேலும் ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், கூடுதலாக வரும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம், குடியிருப்பு மற்றும் இதர வசதிகளுக்குச் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் அவசியம் தானா? இன்றைய Digital மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இன்னும் திறம்படத் தொடர்பில் இருப்பதே சாலச் சிறந்த அணுகுமுறையாக அமையும். ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அந்தச் செலவுகள் அவசியமானதாக இருக்க வேண்டும்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் சாசனத்தின் பிரிவுகளைத் தக்கவாறு திருத்தி அமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'Equal population representation from each MP' என்ற கோட்பாடு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.