தருமபுரி அருகே சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதி முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் பலி
- சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதி ஓசூர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் பலியாகினர். ஒகேனக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 பேரும் விபத்தில் சிக்கிய சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் முனிகிருஷ்ணன் (வயது50). இவர் தனது நண்பர்களுடன், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
இவர்களுடன் காரில் அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாஸ் (47), பசவராஜ் (38) மஞ்சுநாத் (47), சந்திரப்பா (50) ஆகியோர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்தனர்.
அந்த கார் இன்று காலை தருமபுரி அருகே மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் வந்தது. அப்போது சாலை தடுப்புச் சுவரில் மோதி பின்பு அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டி வந்த முனிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
அப்போது விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த முனிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பசவராஜ் மற்றும் சீனிவாஷ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து மகேந்திரமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த பசவராஜ் மற்றும் சீனிவாஸ் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு லாரி மீது மோதி 3 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.