கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மலர் கண்காட்சியை 36 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
- தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் ரகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
- பூ, பழ நாற்றுகள், இடுபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
வடவள்ளி:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் 7-வது மலர் கண்காட்சி கடந்த 8-ந்தேதி தொடங்கியது.
8-ந்தேதி தொடங்கிய மலர் கண்காட்சி கடந்த 12-ந்தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியில் மலர்களால் ஆன முயல், யானை, சரஸ்வதி, அன்னப்பறவைகள் உள்ளிட்ட உருவங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்தது.
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் ரகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
பூ, பழ நாற்றுகள், இடுபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகள் சார்பில் ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட மொத்தம் 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியதாவது:-
வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு நடந்த மலர் கண்காட்சியை 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். மலர் கண்காட்சி நிறைவடைந்தாலும் பெரும்பாலான அலங்காரங்களை இந்த வார இறுதி வரை காட்சிக்கு வைத்திருக்கிறோம்.
தொடர்ந்து பராமரிக்க இயலாத உருவ அலங்காரங்கள் மட்டும் இருக்காது. தோரணங்கள் உள்ளிட்ட இதர அலங்காரங்கள், மலர் அணிவகுப்புகளை மேலும் ஓரிரு நாட்களுக்கு கண்டு ரசிக்கலாம். ஸ்டால்கள், தோட்டக்கலை கண்காட்சிகள் இருக்காது. இதற்கு வழக்கமான கட்டணமான பெரியவர்களுக்கு ரூ.50, குழந்தைகளுக்கு ரூ.30 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.