திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொன்னேரியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி சங்க மாவட்ட தலைவர் தாஸ் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் காத்தவராயன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தங்கவேல், சந்திரசேகர், ஜெய்கர், குமார், கண்ணதாசன், சிவலிங்கம், சகாயநிர்மலா, நாயகம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாஜி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயன், செயலாளர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.