தமிழ்நாடு

எட்டயபுரம் அருகே நின்ற கார் மீது வாகனம் மோதல்- 3 பேர் பலி

Published On 2024-12-25 07:16 GMT   |   Update On 2024-12-25 07:16 GMT
  • பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது.
  • மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

எட்டயபுரம்:

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். 31 வயதான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

முருகப் பெருமானை வேண்டி மாலை அணிந்துள்ள அவர் அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.

நேற்று அவர் தனது நண்பர்கள் செல்வராஜ், விஜயகுமார், மகேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோருடன் காரில் சுவாமி மலைக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு சென்றனர்.

அவர்களது கார் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்த செல்வராஜ் தூக்கம் கலைவதற்காக காரை ஓரமாக நிறுத்தி தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று பயங்கரமாக அவர்களது காரின் மீது மோதியது. இதில்கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. நொறுங்கிய காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இந்த கோர விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகேஷ்குமார், ராஜ்குமார் இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News