தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியதை வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? தி.மு.க.வுக்கு அண்ணாமலை கேள்வி

Published On 2025-02-09 13:40 IST   |   Update On 2025-02-09 13:40:00 IST
  • தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம்.
  • ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 2022 முதல், 2023 2024 வரை, தள்ளுபடி செய்யபபட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட வில்லையென்றால், பொது மக்களுக்கு எப்படித் தெரியும்?

அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார்.

அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.

எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொருகதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டி விட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?

தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.

இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொது மக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News