முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூருக்கு இன்று வருகை- 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
- மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
- பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
கடலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.
அந்த வகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு வருகை தருகிறார்.
இதையொட்டி சென்னையில் இருந்து காலை 9.30 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், மாலை 4.30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் புறப்படுகிறார். பின்னர் மாலை 5.15 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வடலூர் வழியாக நெய்வேலி புறப்பட்டு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
இதையடுத்து நெய்வேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்குகிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயருக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 9.30 மணிக்கு நடக்கும் மாநில அளவிலான பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேப்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லைகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் கடலூர், நெய்வேலி, வேப்பூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே நேற்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதலமைச்சரின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.