தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

Published On 2025-01-01 05:45 GMT   |   Update On 2025-01-01 05:45 GMT
  • மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
  • அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல்:

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் பழனி கோவிலுக்கு வருகை தந்தனர்.

இதனால் பழனி படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். மலைக்கோவிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதையில் ராணி மங்கம்மாள் மண்டபம் அருகே உள்ள வழியில் இறங்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

பழனி மலைக்கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு அதனை பக்தர்கள் பாதுகாப்பு அறையில் வைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி மலைக்கோவிலில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது.

மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதல் கடும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சொர்ணா அபிஷேகமும் நடைபெறும். அதன்படி இன்று காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காகவே அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதனை பெற்றுச் சென்றனர். 

Tags:    

Similar News