தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதில் தி.மு.க. அரசு இரட்டை வேடம்- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2025-02-25 16:07 IST   |   Update On 2025-02-25 16:07:00 IST
  • இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத்தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடி வெடுத்து செயல்படுத்தலாம்.

ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.

இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News