பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்வர்: அண்ணாமலை விமர்சனம்
- பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என மோடி தெளிவாக கூறியுள்ளார்.
- கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன் பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக.
பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் "தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.