கோவை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா
- பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
- மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
கோவை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார். அதன்பின், ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.
மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.
அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.