வைத்திலிங்கம் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
- சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
- ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். ரூ.27 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் புகார் கூறப்பட்ட ஸ்ரீராம் குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.