ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்
- 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
- இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.