டி-20 கிரிக்கெட் போட்டி பார்வையாளர்களுக்கு மாநகர பஸ்களில் இன்று இலவச பயணம்
- வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
- போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை கண்டக்டரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் (ஏ.சி. பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40, 11 மணிக்கு வேளச்சேரிக்கும், மறுமார்க்கமாக வேளச்சேரியிலிருந்து இரவு 10.20, 10.40 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் மின்சார ரெயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். பயணத்தின்போது கிரிக்கெட் போட்டிக்கான அசல் டிக்கெட்டை கையில் வைத்திருப்பது அவசியம். டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது அதனை காண்பிக்க வேண்டும்.