தமிழ்நாடு

தேனி முருகவேலுக்கு, நெல் உற்பத்தி திறனுக்கான விருது

Published On 2025-01-26 12:18 IST   |   Update On 2025-01-26 12:18:00 IST
  • மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி.
  • பரிசுத் தொகை ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.

சென்னை:

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முதலமைச்சரால் சிறப்பு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை 2011-2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது 2021-ம் ஆண்டு முதல் "சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது" என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த ரா.முருகவேல் என்ற விவசாயி 2023-24-ம் ஆண்டிற்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதைப் பெற்றிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவர் விவசாயி. வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் திருந்திய நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

விவசாயி முருகவேல் தனது வயலில் நெல் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் மேம்படுத்தப்பட்ட எம்.டி.யு-1262 என்னும் அதிக விளைச்சல், பூச்சி நோய்கள் எதிர்ப்பு திறன், பல்வேறு சாகுபடி இயற்கை இடர்களைத் தாங்கும் தன்மைகளைக் கொண்ட சன்ன நெல் ரகத்தைப் பயிரிட்டு, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கீழ்க்காணும் விவரப்படி மிக நுணுக்கமாக பின்பற்றி உள்ளார்.

விவசாயி முருகவேல் எம்.டி.யு. 1262 ரக நெல்லின் சான்று விதைகளை உயிர் உரங்கள் மற்றும் உயிரின பூச்சிக் கொல்லிகள் விதைநேர்த்திகளுக்கு உட்படுத்தி, மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் முறைப்படி விதைப்பு செய்து 14 நாட்கள் வயது வரை நாற்றங்காலைப் பராமரித்துள்ளார்.

நன்கு உழவு செய்த தனது உழவு வயலில், பசுந்தாள் உர விதைகளை விதைத்து, விதைத்த 45-ம் நாளில் மடக்கி உழுது, நீர் பாய்ச்சி நடவு வயலை நன்கு தயார் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாத்தியில் நன்கு வளர்க்கப்பட்ட 14 நாட்கள் வயது கொண்ட திரட்சியான நெல் நாற்றுகளைத் தேர்வு செய்து, அவற்றின் வேர்ப் பகுதியை உயிர் உரக் கரைசலில் நன்கு நனைத்து, அவற்றை 25-25 செ.மீ. இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில் வரிசையாக நடவு செய்துள்ளார்.

நெல் பயிருக்கு அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 100 கிலோ 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம், 10 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இட்டுள்ளார்.

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீ ரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களையும் வயலில் இட்டுள்ளார். மேல் உரமாக ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ யூரியா மற்றும் 10 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை நடவு நட்ட 15 மற்றும் 45-ம் நாட்களில் நடவு வயலில் இட்டு சாகுபடியை மேற் கொண்டுள்ளார்.

கோனோ களைக்கருவி கொண்டு நடவு நட்ட 10, 25 மற்றும் 40-ம் நாட்களில் வயல்களில் காணப்படும் களைகளை மடக்கி உர மாக்கி உள்ளார். காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற முறையில் நீர் மேலாண்மை செய்து உள்ளார்.

மேலும் நெல் பயிருக்கு சேதம் விளைவிக்கும் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டுள்ளார்.

உரிய முன் தகவலைப் பெற்றதன் அடிப்படையில் அவரது நெல் வயல், மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதி கள் முன்னிலையில் 23.2.2024 அன்று அறுவடை செய்யப்பட்டதில் எக்டருக்கு 10,815 கிலோ மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த உற்பத்தித் திறன், மாநிலத்திலேயே முதன்மை யாக இருப்பதால் விவசாயி முருகவேல் 2023-2024-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு தகுதி உடையவர் ஆகிறார்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாக கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி முருகவேலை பாராட்டி போற்றும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Tags:    

Similar News