தமிழ்நாடு

சேலத்தில் சாரல் மழை போல் கொட்டிய பனி- குளிரில் நடுங்கிய மக்கள்

Published On 2025-02-13 10:57 IST   |   Update On 2025-02-13 10:57:00 IST
  • செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
  • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு மிக அதிக அளவில் இருந்தது. சாரல் மழை போல பனி கொட்டியதால் அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் குளிரில் நடுங்கினர்.

இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை இயக்க முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீடுகளில் முடங்கினர்.

இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் இன்று அதிகாலை முதல் பனி கொட்டியது. இதனால் செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்றும் அதிக அளவில் பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்வோர் குளிர் தாங்கும் உடைகளை அணிந்த படி சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் பனி மற்றும் குளிரின் தாக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேநேரம் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசிவருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

Tags:    

Similar News