தமிழ்நாடு

ஏற்காட்டில் உறைபனி பொழிவு- கடுங்குளிரில் மக்கள் தவிப்பு

Published On 2024-12-24 09:39 IST   |   Update On 2024-12-24 09:39:00 IST
  • கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
  • பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

ஏற்காடு:

சுற்றுலா தலமான ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலையில் இருந்து காலை வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் பனிப்பொழிவின் காரணமாக எதிரே யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத சூழல் நிலவியது. மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வந்து சென்றன.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த உறைபனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இன்று காலையும் கடும் உறைபனி நிலவியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மேலும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தொடர் பனி மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News