பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள்- அமைச்சர் அன்பில் மகேஷ்
- பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
- போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,
* பார்வை மாற்றுத் திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்வை கணினி வழியாக எழுத உள்ளனர்.
* பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவரின் கோரிக்கையை ஏற்று கணினி வழியில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
* பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்கள். 7 பேர் இறந்து விட்டார்கள்.
* போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
* புகார்கள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
* தவறு என்று வரும்போது அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.