தமிழ்நாடு

ஒரு கோடி ஓட்டு பா.ஜ.க.வுக்கு கிடைத்ததா?- அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி

Published On 2025-03-07 14:18 IST   |   Update On 2025-03-07 14:18:00 IST
  • கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.
  • தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.

சென்னை:

சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு உள்ள பஜார் சாலையிலும், ஜீனிஸ் சாலையிலும் ரூபாய் 2.39 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால் கட்டும் பணியினைச் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சைதை மேற்கு பகுதி தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 முதல் 5-ந்தேதி வரை பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார்.

இதில் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இதற்கு முன்பு எல்லாம் 4, 5 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாரக்கணக்கில் மழைநீர் தேக்கம் என்பது இருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு மிகப்பெரிய மழை ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தும்கூட 24 மணி நேரத்தில் மழை பெய்த சுவடு தெரியாத அளவிற்கு சென்னை மாநகரம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது.

சைதாப்பேட்டையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட சுப்பிரமணிய தெரு, ஜோதி ராம் நகர், சாரதி நகரில் பெரிய அளவில் மழை பாதிப்புகள் இருந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக மழைநீர் கல்வாய் கட்டப்பட்ட விளைவாக சைதாப்பேட்டையில் எந்த பகுதியிலும் மழை நீர் பாதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் நடத்தி இருப்பதற்கு ஆதரவு பெருகி இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பா.ஜ.க.வுக்கு எங்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள், ஏற்கனவே ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற பொழுது ஒரு கோடி பேர் சேர்ந்தனர் என்று கூறினார்கள் ஆனால் எவ்வளவு வாக்கு வந்தது ஒரு கோடி உறுப்பினர்கள் வாக்களித்தார்களா?

தேர்தல் நெருங்குவதால் இப்போது அமலாக்கத்துறை போன்ற சோதனைகளை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News