நிதி வழங்குவதில் காலதாமதம்- ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்: மு.க.ஸ்டாலின்
- தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
- மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.
சென்னை:
திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செய லகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாக செலவிடுவது, திட்ட செயல்பாடுகளைக் கண்காணிப்பது, ஒன்றிய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாக நாம் செய்து வருகிறோம்.
கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டு வாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொல்.திருமாவளவன் பேசுகையில், வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம்.
ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்று
உள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.