அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக மலரட்டும்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
- அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.
- கனவுகள் நனவாகும் ஆண்டாக, எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக அமையட்டும்.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்முறை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் நடமாட்டம் ஆகியவை ஒழிக்கப்பட்டு, அமைதி, வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டைச் அழைத்துச் சென்று, தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான், அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.
வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கலந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருரும் ஆண்டாக, தடைகளைத் தகர்ந்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக, எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.