பழனி கோவில் நகைகள் 192 கிலோ வங்கியில் ஒப்படைப்பு- அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
- பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக பணம், நகைகள், பட்டு வஸ்திரம், வெள்ளி, வெளிநாட்டு கடிகாரம், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக வருவாய் கிடைக்கும் கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
இதுதவிர கோவிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்து வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2010ம் ஆண்டு பழனி கோவில் நகைகள் தங்க பத்திரமாக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பழனி கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 192.984 கிலோ பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, முன்னாள் நீதிபதி மாலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.