பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு
- சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
- பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்று சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.