தமிழ்நாடு

கஞ்சா, செல்போன் பதுக்கலா?- சேலம் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2025-02-15 10:27 IST   |   Update On 2025-02-15 10:27:00 IST
  • சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
  • பெண்கள் சிறையில் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சேலம்:

சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட பல்வேறு கைதிகளும் அடங்குவர். சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கிடைப்பதாகவும், கைதிகள் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாகவும், சிறையில் இருந்தபடியே கைதிகள், நண்பர்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு அவர்களை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி வருவதாகவும் சிலர் புகார் கூறி வந்தனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 90-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறை வார்டன்கள், சிறை காவலர்கள் 50 பேர் என மொத்தம் 140 பேர் இன்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள 19 பிளாக்குகளிலும் உள்ள கைதிகள் அறைகள், கைதிகளுக்கான ஆஸ்பத்திரி, உணவு தயாரிக்கும் கூடம், விவசாய நிலங்கள், காலியிடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அங்குள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன், சார்ஜர்கள், சிம்கார்டுகள் , கஞ்சா உள்பட ஏதாவது பொருட்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.

இது தவிர அருகில் உள்ள பெண்கள் சிறையிலும் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த சோதனைகளில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை அடிக்கடி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே சோதனை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் இன்று காலை ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News