தென்காசியில் மிதமான மழை: குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்த நிலையில் விழுந்தது.
குற்றாலம் மெயின் அருவியில் இன்று மிதமாக விழும் தண்ணீரில் சில சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.