குழாய் அடி சண்டை போல் மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொள்கின்றன- சசிகலா
- தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
- அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.
இங்கு ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க சசிகலா வருகை தந்தார். முன்னதாக அவர் சேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்தார்.
பின்னர், சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடக்கும் 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏதும் முழுமையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
இதனை நான் அடிக்கடி கூறிய பிறகு, தற்போது கிராம சுகாதார நிலையங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 டாக்டர்களை அரசு நியமனம் செய்துள்ளது. ஆனால், அவர்களின் கீழ் பணிபுரியும் செவிலியர்களை இன்னும் நியமனம் செய்யவில்லை.
அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு பயன்படுகிற எந்த வசதியையும் தி.மு.க. அரசு சரிவர செய்யவில்லை, 5 ஆண்டுகளுக்கு நமக்கு லைசன்சு கொடுத்து விட்டனர், நம்மை யாரும் எதுவும் கேட்ட முடியாது என தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
நமது பணிகளை, செயல்திட்டங்களை திறம்பட செய்துவிட்டு, மத்திய அரசிடம் நிதி கேட்டல் நியாயம். ஆனால், அதற்கு மாறாக குழாய் அடி சண்டை போல மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொள்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.