முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்
- மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம்.
- எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
சென்னை:
தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அவ்வப்போது கூட்டப்படும்.
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம். இந்த குழுவின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் திட்டப் பணிகள் பற்றி விளக்க உரையாற்றப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் முதலச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை நிகழ்த்தினார்.
சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.