பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்- அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்..! சீமான் கடும் கண்டனம்
- தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
- திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் பள்ளிகள், ரெயில் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல.
அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.
கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை,
14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.
18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை.
05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் மீது சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை.
18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோயிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை.
07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோயிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும்.
கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் அம்மையார் கனிமொழி பங்கேற்ற திமுக நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் திமுக ஆட்சியில் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது திமுக அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம். இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி!
ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.