செய்திகள்

வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் சுவிஸ் நாட்டில் அனைவருக்கும் மாத சம்பளம் 2,555 டாலர்

Published On 2016-06-06 04:01 IST   |   Update On 2016-06-06 04:01:00 IST
சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது.
ஜூரிச் :

சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது.

சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே முதல் முறையாக வாழ்கிற அனைத்து மக்களுக்கும், அவர்கள் வேலை செய்கிறவர்களாக இருந்தாலும், வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் அடிப்படை மாதாந்திர ஊதியமாக ஒரு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொகை எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படாவிட்டாலும்கூட, இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள், மாதம் 2,555 டாலர் (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம்) வழங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். குழந்தைகளுக்கு கூட மாதம் 625 டாலர் (சுமார் ரூ.42 ஆயிரம்) வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்களே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிஸ் அரசியல்வாதிகளிடையேயும் இந்த திட்டத்துக்கு பெரிதான வரவேற்பு இல்லை. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை.

ஆனால் இந்த திட்டத்தை ஆதரித்து 1 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். சுவிஸ் நாட்டில் இப்படி செய்கிறபோது அதை பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது வழக்கம்.

அந்த அடிப்படையில் தான் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த திட்டத்தை அறிமுகம் செய்தால், செய்கிற வேலைக்கும், பெறுகிற ஊதியத்துக்கும் தொடர்பு இல்லாமல் போய் விடுவதால் அது சமூகத்துக்கு கேடு விளைவித்து விடும் என்று திட்ட எதிர்ப்பாளர்கள் கருத்து கூறுகின்றனர். அதேபோன்று இப்படி வேலை செய்தாலும், வேலை செய்யா விட்டாலும் குறைந்தபட்ச மாதாந்திர அடிப்படை ஊதியம் அனைவருக்கும் உண்டு என்று வந்துவிட்டால், சுவிஸ் நாட்டுக்குள் பிற நாட்டு மக்கள் கோடிக்கணக்கில் குவிந்து விடுவார்கள் என்று வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்துக்கு ஆதரவானவர்கள், வறுமையை எதிர்த்து போராடுவதற்கும், மக்கள் தங்களது வாழ்க்கை முறையும், பணியும் எவ்வாறு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கவும் இந்த திட்டம் உதவியாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் குடிமக்களுக்கும், அங்கு குடியேறி குடியுரிமை பெற்றுவிட்ட வெளிநாட்டினருக்கும் குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு அனைவருக்கும் மாதம்தோறும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே கேள்வி கருத்து வாக்கெடுப்பில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்படி சுவிஸ் அரசாங்கமும், அரசியல்கட்சிகளும் மக்களிடம் வேண்டிக்கொண்டுள்ள நிலையில், பெரும் பரபரப்புடன் நேற்று கருத்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 

Similar News