செய்திகள்

200 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Published On 2016-06-07 12:21 IST   |   Update On 2016-06-07 12:21:00 IST
மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹக்லே என்பவன், சுமார் பதினெட்டு வயது வாலிபனாக இருந்தபோது மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் படிக்கும் ஏழை கிறிஸ்துவ குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினான்.

குழந்தைகள் மீதான பாலியல் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவன், கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலான எட்டாண்டுகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அந்த கொடூரக் காட்சிகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளான்.
 
சுமார் 200 குழந்தைகளை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கியுள்ள இந்த காமுகன் தனது கணினியில் சுமார் 20,000 ஆயிரம் ஆபாச புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய இவனை கேட்விக் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.

தன்மீதான 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட இவனுக்கு எதிரான வழக்கு இங்கிலாந்தில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பீட்டர் ரூக், குற்றவாளி ரிச்சர்ட் ஹக்லேவுக்கு 22 ஆயுள் தண்டனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். தற்போது 30 வயதாகும் ரிச்சர்ட் ஹக்லே, முதல் ஆயுள் தண்டனை காலத்தில் குறைந்தது 25 ஆண்டுகளாவது அவன் சிறைக்குள் கழிக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Similar News