செய்திகள்

வங்காளதேசத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2016-07-26 08:51 IST   |   Update On 2016-07-26 08:51:00 IST
வங்காளதேசத்தில் ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 9 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
டாக்கா:

வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை கைது செய்ய நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த வேட்டையில் பல தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், தலைநகர் டாக்கா அருகேயுள்ள கல்யான்பூர் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அதிரடியாக ’ரெய்டு’ நடத்தினர். அப்போது ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த ஒரு கும்பல் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் எதிர்தாக்குதல் நடத்தினர்.

விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை 6 மணியளவில் அங்கிருந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டு காயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

Similar News