செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் அதிபருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம்

Published On 2016-09-06 12:00 IST   |   Update On 2016-09-06 12:00:00 IST
தென்ஆப்பிரிக்கா நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிடோரியா:

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக ஜேக்கப் ஜுமா இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக ஆளும் கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், ஆளும் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் பொருளாதார நிலைமை பலவீனம் அடைந்து வருகிறது. ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.

அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு நிர்வாக திறமை இல்லை என்றும், ஊழலில் ஈடுபடுகிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த பிரச்சனையை ஆளும் கட்சியினர் கையில் எடுத்து அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News