செய்திகள்

உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்துகொண்ட பிரான்ஸ் பெண் மரணம்

Published On 2016-09-06 21:24 IST   |   Update On 2016-09-06 21:24:00 IST
உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்துகொண்ட பிரான்ஸ் நாட்டு பெண், நீண்ட கால நோய் பாதிப்பினால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லில்லி:

பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை நடத்தினர். இசபெல்லி டினோரி என்ற பெண்ணுக்கு இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது. நாய் கடித்ததால் டினோரியின் முகம் விகாரமாக மாறிப்போனது. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன.

இந்த முகமாற்று ஆபரேசனைத் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில், பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. நீண்டகாலம் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை இன்று தான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாற்று ஆபரேசனின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

Similar News